சிந்திக்க மாட்டீர்களா?

63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.


82:19. அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
57:12. முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).

57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
49:11. முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
அல்லாஹ் மிக்க
அறிந்தவன்.

Comments