நபித் தோழர்களின் சிறப்புகள்

நபித் தோழர்களின் சிறப்புகள்
3649. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?' என்று கேட்பார்கள். 'ஆம், இருக்கிறார்கள்" என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.
என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :62
3650. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
(இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலை முறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்று எனக்குத் தெரியாது.
Volume :4 Book :62
3651. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் நகயீ(ரஹ்) கூறினார்:
நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, 'அஷ்ஹது பில்லாஹ் - அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்" என்றோ, 'அலய்ய அஹ்துல்லாஹ் - அல்லாஹ்வுடன் நான் செய்த ஒப்பந்தப்படி" என்றோ சொன்னால் பெரியவர்கள் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.
அல்லாஹ் கூறினான்:
மேலும், (ஃபய்உ10 எனும் அச்செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் - சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனுடைய உவப்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவிபுரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (திருக்குர்ஆன் 59:08)
மேலும் அல்லாஹ் கூறினான்:
நீங்கள் இந்த நபிக்கு உதவாவிட்டால் (அதனால் என்ன?), இறை மறுப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவியுள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் - தன் தோழரை நோக்கி, 'கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று கூறினர். (திருக்குர்ஆன் 09:40)
"அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் ('ஸ்வ்ர்') குகையில் இருந்தார்கள்" என்று ஆயிஷா(ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறுகின்றனர்.
Volume :4 Book :62
3652. பராஉ(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிப்(ரலி) அவர்களிடமிருந்து பதின்மூன்று திர்ஹம்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிபிடம், '(உங்கள் மகன்) 'பராவூ'க்குச் கட்டளையிடு'கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்" என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப்(ரலி), 'இணைவைப்போர் உங்களைத் தேடிக் கொண்டிருக்க, நீங்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் ('பராஉ'க்கு சேணம் கொண்டு வரும்படி) கட்டளையிட மாட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம்... அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம். இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படுத்தார்கள். பிறகு நான் எவரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார்களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விருமபியது போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!" என்று கேட்டேன். அவன், 'குறைஷிகளில் ஒருவரின் பணியாள்" என்று கூறி அவரின் பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்து கொண்டேன். எனவே, 'உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?' என்று கேட்டேன். அவன், 'ஆம், (இருக்கிறது)" என்று பதிலளித்தான். நான், 'நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?' என்று கேட்டேன். அவன், 'ஆம் (கறந்து தருகிறேன்)" என்று பதிலளித்தான். நான் அவனுடைய ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும் படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனுடைய இருகைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். 'இப்படி" என்று பராஉ(ரலி) தம் இருகைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள். என அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரலி) கூறினார்: அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்து தந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை) மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்து விடும் வரை ஊற்றினேன். பிறகு அதை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் செல்ல அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என்று நான் சொல்ல அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலை வீசித்) தேடிக் கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அது வரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் தன் குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் எவரும் எங்களைக் காணவில்லை. (எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், 'இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்துவிட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று கூறினார்கள்.
Volume :4 Book :62
3653. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், '(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது  தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூ பக்ரே!" என்று கேட்டார்கள்.
Volume :4 Book :62
3654. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி - ஸல் - அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் - ரலி - அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூ பக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூ பக்ரின் வாசலைத் தவிர" என்று கூறினார்கள்.
Volume :4 Book :62
3655. இப்னு உமர்(ரலி) கூறினார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
Volume :4 Book :62
3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :62
3657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூ பக்ர் அவர்களையே) ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும்.
இதை அய்யூப்(ரஹ்) (இக்ரிமா - ரஹ் - அவர்களிடமிருந்தும், அவர்கள் இப்னு அப்பாஸ் - ரலி - அவர்களிடமிருந்தும்) அறிவித்தார்கள்.
இதே ஹதீஸ் வேறொர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அய்யூப்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்படுகிறது.
Volume :4 Book :62
3658. அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
கூஃபாவாசிகள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள், 'நான் இந்த சமுதாயத்தினரிலிருந்து எவரையாவது உற்ற தோழராக ஆக்கிக் கொள்ள விருமபியிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்' என்று எவரைக் குறித்துக் கூறினார்களோ அவர்கள், பாட்டனாரைத் தந்தையின் ஸ்தானத்திற்குச் சமமாக ஆக்கியுள்ளார்கள்" என்று அபூ பக்ர்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு பதில் கூறினார்கள்.
Volume :4 Book :62
3659. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?' என்று, - நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூ பக்ரிடம் செல்" என்று பதில் கூறினார்கள்.
Volume :4 Book :62
3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார்.
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.
Volume :4 Book :62
3661. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள்  தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.
Volume :4 Book :62
3662. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.
Volume :4 Book :62
3663. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) 'ஓர் ஆட்டிடையர் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விச் சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, 'கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக இறுதி) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார்? அந்த நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே' என்று கூறியது. (இவ்வாறே) ஒருவர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. 'நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளேன்' என்று அது கூறிற்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், 'அல்லாஹ் தூயவன்" என்று (வியந்து) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமர் இப்னு கத்தாபும் இதை (இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம்" என்று கூறினார்கள்.
"அபூ பக்ர், உமர் இருவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தியடைவானாக!" (என்று அறிவிப்பாளர் பிரார்த்திக்கிறார்.)
Volume :4 Book :62
3664. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.... அல்லது இரண்டு வாளிகள் நீரை... இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :62
3665. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), 'நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது" என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: மூஸா(ரஹ்) கூறினார்:
நான் சாலிம்(ரஹ்) அவர்களிடம், 'அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'தன் கீழங்கியை இழுத்துக் கொண்டு செல்கிறவன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவோ கூறினார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) '(எவன்) தன் ஆடையை' என்று பதிலளித்தார்கள்.
Volume :4 Book :62
3666. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து 'அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், 'அர்ரய்யான்' என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்து அழைக்கப்படுவார்' உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்' என்று கூறினார்கள். உடனே அபூ பக்ர்(ரலி), 'இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, 'அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், 'நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அபூ பக்ரே" என்று கூறினார்கள்.
Volume :4 Book :62
3667. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார்.
அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.
Volume :4 Book :62
3668. அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்' அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். மேலும், 'நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே' என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், 'முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) 'பனூ சாஇதா' சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம், 'எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்' என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)" என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூ பக்ர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(ரலி) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்ர்(ரலி) மெளனமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்' என்று கூறி வந்தார்கள்.
பிறகு, அபூ பக்ர்(ரலி) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், '(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்' என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(ரலி), 'இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும்ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இல்லை" நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்" என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், 'ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்" என்று கூறினார். அதற்கு உமர்(ரலி), 'அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்" என்று பதில் கூறினார்கள்.
Volume :4 Book :62

Comments