சத்தியம் வந்தது அசத்தியம் ஒழிந்தது ! 3 4 இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது?

Saturday, 13 December 2014

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸா தொழுகை தொழும் முறை
ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ செய்ய வேண்டும். பிறகு இரண்டு புறமும் ஸலாம் கூற வேண்டும்.
முதல் தக்பீருக்கு பின்
ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை(அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....) ஓத வேண்டும்.
இரண்டாவது தக்பீருக்கு பின்
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். (புகாரி)
மூன்றாவது நான்காவது தக்பீருக்கு பின்
மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்
அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்  (முஸ்லிம், நஸயி)
அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா  வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,  அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.  (நஸயி, அஹ்மத்)
ஜனாஸா தொழுகை


யாருக்கு ஜனாஸா தொழுகை?
இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும், இறந்தவரின் மறுமை நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதும் தான் ஜனாஸா தொழுகையாகும்.
இவ்வுலகில் நன்மைகளை வேண்டி முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் அல்லாதவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மறுமை நன்மைகள் இல்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்லாம் பிரகடனம் செய்வதால் இறைவனை நிராகரிக்காதவர்களுக்கும், இணை கற்பிக்காதவர்களுக்கும் மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்.

முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இதை இறைவன் தடை செய்து விட்டான்.
அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையை எனக்குக் கொடுங்கள்! அதில் அவரைக் கஃபனிடுகிறேன். இவருக்காகத் தொழுகை நடத்துங்கள். மேலும் இவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தமது சட்டையை வழங்கி, 'எனக்குத் தகவல் கொடு! நான் அவருக்குத் தொழுகை நடத்துகிறேன்' எனக் கூறினார்கள். அவர் தகவல் கொடுத்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்த எண்ணிய போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிடித்து இழுத்தார்கள். 'முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்துவதற்கு அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீ அவர்களுக்கு மன்னிப்புத் தேடினாலும் தேடாவிட்டாலும் (சரி தான்) அவர்களுக்காக எழுபது தடவை நீ மன்னிப்புத் தேடினாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று (9:80) கூறி இரண்டில் எதையும் தேர்வு செய்யும் உரிமையை எனக்குத் தந்துள்ளான்' என்று கூறிவிட்டு அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். உடனே 'அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் ஒரு போதும் தொழுகை நடத்தாதே! அவர்களின் அடக்கத்தலத்திலும் நிற்காதே' என்ற வசனத்தை (9:84) அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 1269, 4670, 4672, 5796
முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்தக் கூடாது என்ற தடை நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாகும்.
ஒருவர் முனாபிக்கா? இல்லையா? என்பதை இன்னொருவர் அறிய முடியாது. வெளிப்படையாக ஒருவர் கூறுவதைத் தான் நாம் நம்ப வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் யார் யார் முனாபிக்குள் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தான்.
நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.    திருக்குர்ஆன் 3:179
இதன் அடிப்படையில் யார் யார் முனாபிக்குகள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முனாபிக்குகளைப் பிரித்தறியும் ஆற்றல் இல்லை.
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.
ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.  அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)   நூல்: முஸ்லிம் 1624
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று கூறவில்லை என்று காரணம் கூறி இந்த நபிவழியை சிலர் நிராகரிக்கின்றனர்.
யாரேனும் கடன்பட்டிருந்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உங்கள் தோழருக்கு நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துங்கள்' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்கொலை செய்தவருக்கு இப்படிக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்றால் அதை மீறி நபித்தோழர்கள் தொழுகை நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதை ஏனோ இந்த அறிஞர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
மேலும் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதும், மறுமைப் பயன்களை அவருக்காக வேண்டுவதுமாகும்.
தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்ற கருத்தில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் முடிவு எடுத்து விட்டானோ அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனின் தீர்ப்பை எதிர்ப்பதற்குச் சமமாகும்.
'ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்' என்று அல்லாஹ் கூறி விட்டான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)   நூல்: புகாரி 1364
'யாரேனும் மலையிலிருந்து உருண்டு தற்கொலை செய்து கொண்டால் அவன் நரகத்தில் உருண்டு கொண்டே நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டால் விஷத்தைக் குடித்துக் கொண்டே நரகில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் இரும்பின் மூலம் தற்கொலை செய்தால் தன் கையில் அந்த இரும்பை வைத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டு நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 5778
தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று தீர்மானமாகி விட்ட பின் அவருக்காக மறுமைப் பயன் கோருவது இறைவனின் கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தற்கொலை செய்தவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது.
பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துதல்
இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம்.
கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களு டன் கண்டோம்.அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)   நூல்கள்: நஸயீ 1933, அபூ தாவூத் 2335
விபச்சாரம் செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய பின் அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3209
எனவே ஒருவர் பாவம் செய்திருக்கிறார் எனக் காரணம் காட்டி அவருக்காக ஜனாஸா தொழுகை மறுக்கப்படக் கூடாது.
போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை                      அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.     இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் வந்துள்ளதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: புகாரி 1343, 1348, 4080
ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். அவர் போரில் கொல்லப்பட்டார். அவரை தமது குளிராடையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள். பின்னர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)   அறிவிப்பவர்: ஷத்தாத் (ரலி) நூல்: நஸயீ 1927
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.
ஆயினும் வீரமரணம் அடைந்தவர்களுக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்பதே சரியாகும்.
உயிருடன் உள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடைபெறுபவர் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மிம்பர் (மேடை) மீது ஏறினார்கள். 'நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். நான் உங்கள் மீது சாட்சி கூறுபவனாக இருக்கிறேன். ஹவ்ல் (கவ்ஸர்) தான் உங்களை நான் சந்திக்கும் இடம். நான் இந்த இடத்திலிருந்து கொண்டே அதைக் (கவ்ஸரை) காண்கிறேன். நீங்கள் இணை வைப்பீர்கள் என்பது பற்றி (நபித் தோழர்களாகிய) உங்கள் விஷயத்தில் நான் அஞ்சவில்லை. மாறாக இவ்வுலகம் பற்றியே அதில் மூழ்கி விடுவீர்கள் என்று அஞ்சுகிறேன்' எனக் கூறினார்கள். அது தான் நபிகள் நாயகத்தை நான் இறுதியாகப் பார்த்ததாகும்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல்: புகாரி 4042
இறந்தவர்களுக்குத் தொழுகை நடத்துவது போல் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. (புகாரி 1344, 3596, 4085, 6426, 6590)
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு உடணடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்றாலும் தாம் மரணிப்பதற்குச் சில நாட்களுக்கு முன், உஹதுப் போர் நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள் என்றால் இதைத் தான் நாம் சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உஹதுப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நாம் தொழுகை நடத்தவில்லையே என்று எண்ணி நாம் மரணிப்பதற்குள் எப்படியும் தொழுகை நடத்திவிட வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஏற்கனவே விட்ட ஜனாஸா தொழுகையை இப்போது தொழுதிருக்கும் போது இதில் கருத்து வேறுபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை.
பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்  "'சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: திர்மிதீ 952, நஸயீ 1917, இப்னு மாஜா 1496,   அஹ்மத் 17459, 17497
'விழு கட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி நூல்கள்: அபூ தாவூத் 2766, அஹ்மத் 17468, 17475

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவர் (உடல்) கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)   நூல்: நஸயீ 1921
சிறுவர்களுக்காகவும், முழு வடிவம் பெறாத கட்டிகளுக்காகவும் ஜனாஸா தொழுகை உண்டு என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.
ஆயினும் பெரியவர்களைப் போல் இது கட்டாயம் இல்லை. சிறுவர்களுக்குத் தொழுகை நடத்தாமல் விட்டு விட்டால் அது குற்றமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)  நூல்: அபூ தாவூத் 2772, அஹ்மத் 25101
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை என்றால் தமது மகனுக்கு அதைச் செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.
வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும்.  ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று குறிப்பிடப்படுகிறது.
இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
'இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 1320, 3877, இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நஜ்ஜாஷி மன்னரைத் தவிர இன்னும் எண்ணற்ற நல்லவர்கள் பல்வேறு ஊர்களில் மரணமடைந்திருந்தார்கள். அவர்களில் எந்த ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்தவில்லை.
அபீஸீனிய மன்னரான நஜ்ஜாஷி அவர்கள் இரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தார். எனவே அவர் இறந்த பின் அவருக்குத் தொழுகை நடத்தப்படவில்லை. ஒருவரும் தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்து விட்ட காரணத்தால் அவருக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
இது பற்றி மற்றொரு அறிவிப்பில் 'நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,
இப்னு மாஜா 1526 நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் ஏன் தொழுகை நடத்தினார்கள் என்பது இந்த அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது.
ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்தது நமக்குத் தெரிய வந்தால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தைக் கருதி உலகின் பல பகுதிகளிலும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல்
ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். 'எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 458, 460, 1337
இந்தக் கருத்து புகாரி 857, 1247, 1321, 1340 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவரது அடக்கத்தலம் சென்று அதன் முன்னே நின்று தொழுகை நடத்தலாம் என்று இதனடிப்படையில் சிலர் வாதிக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்து காட்டியிருந்தால் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் இது சரியான நிலை போல் தோன்றினாலும் இதைப் பொதுவான நிலைபாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் சிறப்புத் தகுதி உடையவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் அவர்களின் துஆவுக்கு அதிக சக்தி உள்ளது. தனது துஆ தன் காலத்தில் தன்னோடு வாழ்ந்த யாருக்கும் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற தகுதியின் அடிப்படையில் இவ்வாறு தொழுகை நடத்தினார்களா? அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தினார்களா? என்று ஆராய வேண்டும். தூதர் என்ற சிறப்புத் தகுதிக்காக இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அதில் நாம் போட்டி போடக் கூடாது.
'இந்தக் கப்ருகள் இதில் அடக்கப்பட்டவர்களுக்கு இருள் நிறைந்ததாக உள்ளன. நான் அவர்களுக்குத் தொழுவதன் மூலம் அவர்களது கப்ருகளை அல்லாஹ் ஒளிமயமாக்குகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி)  நூல்கள்: நஸயீ 1995, இப்னுமாஜா 1517
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் என்ற தகுதியின் காரணமாகவே ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு மீண்டும் தொழுகை நடத்தியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டிருந்தாலும் தமது தொழுகைக்கு ஒரு சிறப்பு உள்ளது என்ற காரணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் இது நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உரிய தனித் தகுதியாகும்.
ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு என் தொழுகையால் அருள் கிட்டும் என்று சொல்லும் தகுதி இந்த உம்மத்தில் எவருக்கும் இல்லை என்பதால் கப்ரில் போய் ஜானாஸா தொழுகை நடத்தக் கூடாது.
ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாம்
ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம் அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்  நூல்: ஹாகிம் 1/519

பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்துதல்
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)  நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617

ஜனாஸாவுக்குத் தனி இடத்தை நிர்ணயித்தல்
வீட்டிலும், பள்ளிவாசலிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்றாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அரிதாகவே நடந்திருக்கிறது.
பளளிவாசலில் ஜனாஸாவை வைப்பதற்கு என தனியாக ஒரு இடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் அங்கு தான் ஜனாஸாவை வைத்து தொழுகை நடத்தினார்கள்.
விபச்சாரம் செய்த ஆணையும், பெண்ணையும் யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பள்ளிவாசலுக்கு அருகில் இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் இடத்தில் வைத்து அவ்விருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1329, 4556, 7332
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாக்களை வைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தனியிடம் இருந்தது என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்  நூல்: ஹாகிம் 1/519
பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பாக்ள்
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)  நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617
பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாத நேரங்கள்
1. சூரியன் உதிக்கும் நேரம். 2. சூரியன் உச்சிக்கு வரும் நேரம். 3. சூரியன் மறையும் நேரம் ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 1373
மேற்கண்ட நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதால் அதில் ஜனாஸா தொழுகையும் அடங்கும். மேலும் இறந்தவர்களை அந்த நேரங்களில் அடக்கம் செய்யக் கூடாது என்று இணைத்துக் கூறியிருப்பது மேலும் இக்கருத்தை வலுப்படுத்துகின்றது.
பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை
ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே!
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்பது ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஆண்களின் உடல்களை இமாமுக்கு அருகிலும், பெண்களின் உடல்களை கிப்லாவுக்கு (கிப்லாவின் பக்கம் உள்ள சுவருக்கு) அருகிலும் வைத்தார்கள். அனைத்து உடல்களும் ஒரே நேர் வரிசையில் வைக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் மனைவி உம்மு குல்சூம், ஸைத் பின் உமர் என்ற அவரது மகன் ஆகியோரின் உடல்களும் வைக்கப்பட்டன. அப்போது ஸயீத் பின் ஆஸ் (ரலி) இமாமாக இருந்தார். அந்தச் சபையில் இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகிய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் 'இதை நான் ஆட்சேபிக்கிறேன்' என்றார். அப்போது நான், இப்னு அப்பாஸ் (ரலி) அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகியோரைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இது நபி வழி தான்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு  நூல்: நஸயி குப்ரா 1/141, பைஹகீ 4/33

தொழுகையில் அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல்
'இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: முஸ்லிம் 1576
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் 'குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!' என்றார்கள். நான் சென்று பார்த்த போது மக்கள் திரண்டிருந்தனர். இதை இப்னு அப்பாஸிடம் தெரிவித்தேன். 'நாற்பது பேர் அளவுக்கு இருப்பார்களா?' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் ஜனஸாவை வெளியே கொண்டு செல்லுங்கள்! எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்' என்று கூறினார்கள்..  அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம் 1577
அதிகமானவர்கள் ஜனாஸாவில் கலந்து கொண்டு துஆச் செய்வதற்காகத் தாமதப்படுத்தலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது.
'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)  நூல்: முஸ்லிம் 1079, 1078
நபிகள் நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம்.
ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை
ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும்.
ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும்.
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கேற்கவில்லை.
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர். ஒட்டு மொத்த சமுதாயமும் தொழவில்லை. இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஜனாஸாவை முன்னால் வைத்தல்
ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.  நூல்: புகாரி 383

இமாம் நிற்க வேண்டிய இடம்
இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)  நூல்: புகாரி 332, 1331, 1332
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். 'அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் 'இதைக் கவனத்தில் வையுங்கள்' என்றார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779,  இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640
இமாம் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை வைத்து இறந்தவர் ஆணா பெண்ணா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப துஆச் செய்யும் வாய்ப்பு இதனால் மக்களுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
மூன்று வரிசைகளாக நிற்பது அவசியமா?
ஜனாஸா தொழுகையில் குறைவான நபர்களே வந்தாலும் அவர்களை மூன்று வரிசைகளாகப் பிரித்து நிற்க வைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு செய்து வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள் என்று அபூ உமாமா அறிவிப்பதாக தப்ரானியில் (8/190) ஒரு ஹதீஸ் உள்ளது
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹ்யஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
'யாருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்துகிறார்களோ அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. நூல்கள்: திர்மிதி 949, அபூ தாவூத் 2753, இப்னு மாஜா 1479, தப்ரானி 19/299
இதே கருத்தில் மற்றொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் (16125) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரண்டு அறிவிப்புகளிலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் தத்லீஸ் செய்பவர் என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
(தான் நேரடியாக யாரிடம் செவியுற்றாரோ அவரை இருட்டடிப்புச் செய்து விட்டு, அவருக்கு மேலே உள்ள அறிவிப்பாளர் கூறியது போல் ஹதீஸை அறிவிப்பது தத்லீஸ் எனப்படும்.)
தொழுகையில் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப வரிசைகளை அமைத்துக் கொள்ளலாம்.
இரண்டு பேர் மட்டும் இருந்தால்...
பொதுவாக ஜமாஅத் தொழுகையின் போது இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் இருவரும் அடுத்தடுத்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இருவர் அல்லது அதற்கு மேல் இருந்தால் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் ஜனாஸா தொழுகையில் இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் அவர் இமாமுக்குப் பின்னால் தான் நிற்க வேண்டும்.
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூ தல்ஹா நின்றனர். அபூ தல்ஹாவின் மனைவி அதற்குப் பின்னால் நின்றார் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
பெண்ணையும், அபூ தல்ஹவையும் சேர்த்து இருவர் நின்றதால் தான் அபூ தல்ஹாவைப் பின்னால் நிற்க வைத்தார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும், எனது தாயாரும் தொழுத போது என்னைத் தமது வலது பக்கத்திலும், என் தாயாரைப் பின்னாலும் நிற்க வைத்து தொழுகை நடத்தினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  நூல்: முஸ்லிம் 1056
ஜனாஸா தொழுகையிலும், சாதாரண தொழுகையிலும் ஒரு ஆண் ஒரு பெண் இருந்த போது இரண்டுக்கும் வெவ்வேறு முறையில் வரிசையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைத்ததால் ஜனாஸாவுக்குத் தனிச் சட்டம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உளூ அவசியம்
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை.
'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)  நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,
இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019
ஜனாஸா தொழுகையை தக்பீரில் துவக்கி ஸலாமில் முடிக்கிறோம். எனவே இதுவும் தொழுகை தான். இதற்கும் உளுச் செய்வது அவசியமாகும்.
கிப்லாவை முன்னோக்குதல்
மற்ற தொழுகைகளை எவ்வாறு கிப்லாவை நோக்கித் தொழ வேண்டுமோ அது போல் ஜனாஸாத் தொழுகையையும் கிப்லாவை நோக்கித் தான் தொழ வேண்டும்.
'நீ தொழுகைக்கு நின்றால் முழுமையாக உளூச் செய்து விட்டு கிப்லாவை நோக்கு!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6251, 6667

தக்பீர் கூறுதல்
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்.
அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்' என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர்' எனக் கூறி துவக்க வேண்டும்.
'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,  இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019

நான்கு தடவை தக்பீர் கூறுதல்
நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879

ஐந்து தடவை தக்பீர் கூறுதல்
ஐந்து தடவை தக்பீர்கள் கூறுவதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.
ஸைத் (ரலி) அவர்கள் எங்கள் ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறி தொழுவிப்பார். ஒரு தடவை ஐந்து தடவை தக்பீர் கூறினார். இது பற்றி அவரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து தடவையும் தக்பீர் கூறியிருக்கிறார்கள்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா  நூல்: முஸ்லிம் 1589
நான்கு தக்பீர் கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்பதையும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?
ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அனைவரையும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி அபூ வாயில் அறிவிப்பதாக பைஹகியில் (4/37) பதிவாகியுள்ளது.
அபூ வாயில் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி இருந்தது என்று இவர் அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா என்றால் ஏழு முறை தக்பீர் கூறுவார்கள். ஹாஷிம் குலத்தவர் என்றால் ஐந்து தடவை தக்பீர் கூறுவார்கள். பின்னர் கடைசிக் காலம் வரை நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என்று ஒரு ஹதீஸ் தப்ரானியில் (11/160) உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் நாஃபிவு அபூ குர்முஸ் என்பார் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறியுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர் என்ற ஹதீஸ் தப்ரானியில் (11/174) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஷ்ர் பின் அல்வலீத் அல்கின்தீ என்பவர் வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டதும் அவரது உடல் வைக்கப்பட்டது. அவருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்ற செய்தி தப்ரானியில் (11/62) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் அஹ்மத் பின் அய்யூப் பின் ராஷித் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமான அறிவிப்பாளர். மேலும் உஹதுப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று புகாரியில் பதிவான ஆதாரப்பூர்வமான செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளது.
எனவே நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறுவதே நபிவழியாகும்.
தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை
நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
மாறாக ஒரு தக்பீருக்கும், இன்னொரு தக்பீருக்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன. அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்.
முதல் தக்பீருக்குப் பின்...
முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். 'இதை நபிவழி என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன்' என்று கூறினார்கள்.  நூல்: புகாரி 1335
இத்துடன் நமக்குத் தெரிந்த ஏதேனும் அத்தியாயத்தை ஓத வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'இது நபிவழியும், உண்மையும் ஆகும்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ்  நூல்: நஸயீ 1961
முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)  நூல்: நஸயீ 1963

இரண்டாவது தக்பீருக்குப் பின்...
இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா அறிவிக்கிறார். நூல்: பைஹகி (4/39)
மேற்கூறிய ஹதீஸில் ஸலவாத், துஆ என்ற வரிசையில் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் ஸலவாத் ஓத வேண்டும்.
ஒவ்வொரு தக்பீருக்குப் பின் இதை ஓத வேண்டும் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவது தான் நல்லது.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
மூன்றாவது, நான்காவது தக்பீருக்குப் பின்... மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்குப் பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.
ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை ஓதியுள்ளனர். அவை அனைத்தையுமோ, அவற்றில் இயன்றதையோ நாம் ஓதிக் கொள்ளலாம்.
அத்துடன் நாம் விரும்பும் வகையில் நமது தாய் மொழியில் இறந்தவருக்காக துஆச் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர்.
அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு
பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி உனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறிக் கொண்டு இருந்தார். அவரைப் பற்றி நீயே நன்கு அறிந்தவன். இவர் நல்லவராக இருந்தால் இவரது நற்கூலியை அதிகரிப்பாயாக! இவர் தீயவராக இருந்தால் இவரை மன்னித்து விடுவாயாக! இவரது நற்செயலுக்கான கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! இவருக்குப் பின் எங்களைச் சோதனையில் ஆழ்த்தி விடாதே!  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)
ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தனர்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஃபு அன்ஹு வஆஃபிஹி வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பிமாயின் வஸல்ஜின் வபரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி வஅதாபன்னார்
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)  நூல்: முஸ்லிம் 1601
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்
பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!
இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)  நூல்: முஸ்லிம் 1600
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வரும் துஆவை ஓதுவார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு
பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாஜா 1487
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்துள்ளனர்.
அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்
பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன். அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)  நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு மாஜா 1488, அஹ்மது 15443
இன்னாரின் மகன் இன்னார் என்ற இடத்தில், அதாவது ஃபுலானப்ன ஃபுலான் என்ற இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின் மேற்கண்ட துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.
'இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346
உள்ளத் தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும் போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்தவருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய் மொழியில் துஆச் செய்யலாம்.
ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்த வேண்டுமா?
ஜனாஸாத் தொழுகையில் ஒவ்வொரு தடவை தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்தி மீண்டும் கைகளைக் கட்டிக் கொள்ளும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது.
இதற்கு ஆதாரம் இல்லை. தக்பீர் என்ற சொல்லுக்கு அல்லாஹு அக்பர் எனக் கூறுதல் என்பதே பொருள். எனவே நான்கு தடவை அல்லாஹு அக்பர் எனக் கூறுவது தான் நபிவழியாகும். கைகளை அவிழ்த்துக் கட்டுவதோ, அல்லது உயர்த்திக் கட்டுவதோ நபிவழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும் கைகளை உயர்த்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.  நூல்: புகாரி 693, 694, 696, 697
ஜனாஸா தொழுகையில் ருகூவு, சுஜுது இல்லாததால் தொழுகையின் முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்த வேண்டும். அதன் பின்னர் கைகளைக் கட்டிய நிலையிலேயே மற்ற தக்பீர்களைக் கூற வேண்டும். ஸலாம் கூறுதல்
கடைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)  நூல்கள்: பைஹகீ 4/43, தப்ரானி 10/82
மற்ற தொழுகைகளில் ஸலாம் கொடுப்பது போன்றே ஜனாஸா தொழுகையிலும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற தொழுகைகளில் வலது புறமும், இடது புறமும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)  நூல்: நஸயீ 1130, 1302, 1303, 1305, 1307, 1308
வலது புறம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' இடது புறம் அஸ்ஸலாமு அலைக்கும்' என்று மட்டும் ஸலாம் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: நஸயீ 1304
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.
கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்து:ல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள்.
எனவே ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல.
நன்றி நல்லூர் தஃவா

1 comment: